RSS

Wednesday 20 October 2010

எதிரி, பொது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் குறிவைத்துள்ளான்

அரசியல் குழு: ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமெனயி அவர்கள், ஈரானின் 1979ம் வருடப் புரட்சி அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையின் வழியாகச் செலுத்தப்பட்டதாகும் என செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இஸ்லாமியக் குடியரசின் எதிரிகள், இப்புரட்சியின் சமய வலிமையை குறைப்பதற்காக தமக்குச் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் பரீட்சித்துப் பார்த்து விட்டார்கள் என்றார். 

இஸ்லாமிய அடையாள நகரான கும்முக்கான அவரது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தின் போது, கும் நகர மக்கள் மத்தியில் அயத்துல்லாஹ் காமெனயி அவர்கள் உரையாற்றினார். 

ஆயத்துல்லாஹ் காமெனயி அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், இந்த சமய முக்கியத்துவம் வாய்ந்த நகரம், வரலாற்றில் அரசியல் சாணக்கியத்தின் குவிமையமாக விளங்கியது. 1979ல் இஸ்லாமியப் புரட்சி அடைந்த மாபெரும் வெற்றி, அஹ்லுல்பைத் போதனைகளுக்காக அர்ப்பணிப்புடன் இஸ்லாமிய உலகுக்குச் சேவையாற்றும் பணியாளர்களின் உருவாக்கம் குறிப்பாக ஹவ்சா இல்மிய்யா எனும் சமய அறிவியல் பாடசாலைகளின் உருவாக்கம் என்பன இந்நகரின் முக்கிய வரலாற்றுச் சிறப்புகளாகும் எனக் குறிப்பிட்டார். 

உலகக் கொடுமைக்காரர்கள், ஈரான் இஸ்லாமியக் குடிரயசுக்கு எதிராக தீய திட்டங்களை வகுத்து, பொதுமக்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தற்போது குறிவைத்துள்ளனர் எனக் குறிப்பிட்ட ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் காமெனயி அவர்கள், நாட்டின் நிருவாகக் கட்டமைப்பிலிருந்து சமயத்தின் அடையாளங்கள் அனைத்தையும் முற்றாகச் சிதைக்கும் வரை இவ்வெதிரிகள் புரட்சியின் அதிகார சபைகளுக்கு தொடர்ந்தும் அழுத்தங்கள் கொடுத்தக் கொண்டேயிருப்பர் எனவும் குறிப்பிட்டார். 

ஆக்கிரமிப்பாளர்களிடம் சரணடைவதை இஸ்லாம் எப்போதும் அனுமதித்ததில்லை. நீதி, சுதந்திரம், ஆன்மீகம் மற்றும் அபிவிருத்தி என்பவற்றுக்காக உழைப்பதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இதே காரணத்திற்காக, புரட்சியின் அதிகார நிறுவனங்கள் உலக மேலாதிக்கத்துக்கு எப்போதும் அடிபணியப் போவதில்லை. இந்த எதிரிகளுக்கு எதிரான தமது போராட்டத்தை அவை முன்கொண்டு செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இஸ்லாமியப் போதனைகளுக்கெதிரான வல்லாதிக்கத்தின் சர்வதேச அழுத்தம் பற்றிக் குறிப்பிட்ட செய்யித் அலி காமெனயி அவர்கள், சல்மான் ருஷ்தியின் சூழ்ச்சி, இஸ்லாமிய விரோத திரைப்படங்கள், அவமதிப்புக் கேலிச் சித்திரங்கள் மற்றும் குர்ஆன் எரிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல பரீட்சார்த்தங்களை இஸ்லாத்தின் எதிரிகள் ஏற்கனவே முயற்சித்துப் பார்த்து விட்டனர். தற்போது ஈரானின் உட்புறத்தில் பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சமய நம்பிக்கையைத் தளர்த்துவதற்கு அவர்கள் முயற்சித்து வருகின்றனர் எனவும் ஆன்மீகத் தலைவர் குறிப்பிட்டார். 

தற்போது அதிகரித்து வரும் அபிவிருத்திப் பணிகளை முடக்கும் நோக்குடன், புரட்சிகர நிறுவனங்களுக்கு எதிராக கெடுநோக்குக் கொண்ட திட்டங்களைப் பரவச் செய்வதனூடாக பொது நம்பிக்கைகளைத் தகர்த்து விட முடியும் என எதிரிகள் எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், இத்தகைய பல்வேறு முயற்சிகளைச் செய்தும் 32 வருடங்களுக்கு முன் படுதோல்வி கண்ட இவ்வெதிரிகள் இம்முறையும் தமது திட்டங்கள் அனைத்திலும் பெரும் தோல்வியைச் சந்திப்பார்கள் என அவர் ஆரூடமும் கூறினார். 

கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அளித்த 40 வீத வாக்களிப்பு, நாட்டிலுள்ள இஸ்லாமிய முறைமைக்கான சர்வஜன வாக்கெடுப்பை நிகர்த்தது எனக் குறிப்பிட்ட ஆன்மீகத் தலைவர், இம்முறைமையைத் தகர்த்து விடுவதற்காக எதிரிகள் மேற்கொண்ட அனைத்து சதிகளும் அல்லாஹ்வின் அருளால் முறியடிக்கப்பட்டு சர்வதேச சமூகத்தின் முன் அவர்கள் அவமானப்பட்டுக் குறுகிப் போயுள்ளனர் என்றார். 

எதிரிகளின் விருப்பத்திற்குப் புறம்பாக கடந்த வருடத் தேர்தல் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் நாட்டின் மீதான விசுவாசத்தையும் மேலும் அதிகப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

அரசியலையும் சமயத்தையும் பிரிக்க முனையும் எதிரிகளின் குழப்பங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்த ஆன்மீகத் தலைவர், இஸ்லாத்தின் பிரதிநிதிகள் மக்களை விழிப்புணர்வூட்டுவதில் எவ்வாறு வெற்றி பெற்றனர் என்பதை நன்கு விளங்கிக் கொண்டுள்ளனர். 

கும் நகரின் தேசிய மற்றும் சர்வதேச அந்தஸ்துகள் பற்றிக் குறிப்பிட்ட ஆன்மீகத் தலைவர், மிகவும் பிரபலமான இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், மற்றும் பெருந்தொகையான யாத்திரைத் தலங்கள் என்பவற்றைக் கொண்டுள்ளமை இந்நகரின் விசாலமான சிறப்புக்கும் ஆளுமைக்கும் போதுமான சான்றாகும் என்றார்.

No comments:

Powered by Blogger.