RSS

Tuesday 12 October 2010

ஆன்மீகத் தலைவரின் பத்வாவைப் புகழும் எகிப்திய அறிஞர்

அரசியல் குழு: இறைத்தூதரின் மனைவி ஆயிஷா தொடர்பான மோசமான விமர்சனங்களைத் தடைசெய்து, இஸ்லாமியப் புரட்சியின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமெனயி அவர்கள் விடுத்துள்ள பத்வாவை, எகிப்தின் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கான பேச்சாளர் ஒருவர் மிகவும் வரவேற்றுள்ளார்.

முஹம்மத் ரிபாஃ அல்தஹ்தாவி என்பவர் அல்ஜசீராவுக்குக் குறிப்பிடுகையில், 'இந்த பத்வா, இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், இஸ்லாமிய உம்மாஹ்வின் மத்தியில் பிளவை உண்டு பண்ண முயற்சிக்கும் எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பதற்குமான முக்கியமானதொரு முன்னெடுப்பாகும்' எனக் கூறினார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், மிகப் பொருத்தமான ஒரு சூழலில் வெளியிடப்பட்டுள்ள இந்த பத்வா, இரண்டு பரிமாணங்களைக் கொண்டுள்ளது என்றார். இஸ்லாமிய ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்கான அரசியல் முன்னெடுப்பு ஒரு பரிமாணம், ஸஹாபாக்கள் தொடர்பான அஹ்லுல்பைத் பின்பற்றுனர்களின் கருத்துக்களை பொதுமைப்படுத்துவது இரண்டாவது பரிமாணம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இஸ்லாமிய உலகில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப வேண்டுமாயின், ஷீஆக்களும் சுன்னாக்களும் தங்களிடையிலான அற்ப வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஒன்றுபட்டுழைக்க முன்வர வேண்டுமெனவும் எகிப்திய அறிஞர் வலியுறுத்தினார். 

இறைத்தூதரின் மனைவி ஆயிஷா மற்றும் சுன்னி முஸ்லிம்களால் உயர்வாக மதிக்கப்படக் கூடிய இஸ்லாமிய வரலாற்றுப் பிரமுகர்கள் போன்றோரை விமர்சிப்பதைத் தடுக்கும் பத்வா ஒன்றை, கடந்த அக்டோபர் 2ம் திகதி, ஆயத்துல்லாஹ் அலி காமெனயி அவர்கள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.