RSS

Saturday 9 October 2010

திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா?

திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா?
ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, ‘டை’ கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும், தலித் மக்களைத் தலைநிமிரச் செய்தார்.

சாதியின் பெயரால்… மனுநீதியின் பெயரால்… ஒதுக்கப்பட்டு, வதைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் சமூக நீதியைப் பெற்றுத் தந்தார்.

இந்துத்துவத்தின் வேருக்கு வெந்நீர் ஊற்றிய அந்தத்தலைவர், தமது இறுதி மூச்சு உள்ளவரை இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரம் காட்டினார். “இந்துவாகச் சாகமாட்டேன்” என்று சூளுரைத்துச் செயல்படுத்தினார்.

அந்தப்புரட்சியாளரின் தொடர்ச்சியாய், தமிழ்மண்ணில் களமாடுபவர்தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

சேரிகளில் அடுப்பு எரியவும், விளக்கு எரியவும் வழிவகுத்தவர் அம்பேத்கர் என்றால், சேரிகள் எரிக்கப்படுவதை தடுத்துக் காத்தவர் திருமாவளவன்.
சட்டங்கள் ஆளவும், பட்டங்கள் அடையவும் திட்டங்களைத் தந்தவர் அம்பேத்கர் என்றால், குண்டர் சட்டங்கள் மூலம் சேரி மக்கள் வதைக்கப்படுவதை எதிர்த்து எழுந்தவர் திருமாவளவன்.

தனித்தொகுதியும், அரசியல் உரிமையும் பெற்றுத் தந்தவர் அம்பேத்கர் என்றால்,அரசியலில் பொம்மைகளாய் இருக்காமல் தனித்தன்மையோடு வளர அடித்தளமிட்டவர், திருமாவளவன்.

இவ்வாறு அம்பேத்கரின் வழித்தடத்தில் அரசியல் அதிகாரத்தை நோக்கி திமிறி எழுந்த திருமாவளவன், தலித் பிரச்சினைகளை மட்டுமில்லாமல், தமிழக முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் கையில் எடுத்துப் போராடி வருகின்றார்.
இந்தியச் சூழலில் தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவை ‘தொப்புள்கொடி உறவு’ என்று அழைப்பதுண்டு. நெருக்கமும், இணக்கமும் கொண்ட சிறப்பு மிக்க உறவு அது.
இந்துத்துவத்தின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகும் இரட்டைச் சமூகம் என்ற அடிப்படையில் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கும், வட்டமேசை மாநாட்டிற்கும் அனுப்பி வைத்து ஆதரவளித்த முஸ்லிம் லீக்கின் காலத்திலிருந்தே அந்த உறவு வலுப்பெற்றுத் தொடர்கிறது.
தலித்துகளைக் கருவியாக்கி, முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிடும் இந்துத்துவ சூழ்ச்சியை வேரறுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், தலித் தலைவர்களோடும், இயக்கங்களோடும் முஸ்லிம்களுக்கு நல்லுறவே நீடித்து வருகிறது.
தமிழச் சூழலில் தலித்துகளின் தலைவரான இளையபெருமாள் காலத்திலிருந்து டாக்டர் அ.சேப்பன், திருமாவளவன் என இன்றுவரை அனைவருடனும் நட்புறவு நீடித்து வருகிறது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிகுந்த உறவைச் சீர்குலைத்து, தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இந்துத்துவக் கும்பல் துடியாய்த்துடிக்கிறது. அம்பேத்கரின் பெயரைச் சொல்லி, அரசியல் களத்திற்கு வந்த பலரையும் பார்ப்பனீயம் மென்று விழுங்கிவிட்டது.
தமிழகத்தில் தடா பெரியசாமி முதல் டாக்டர் கிருஷ்ணசாமி வரை எல்லா சாமிகளும், சங்கராச்சாரி சாமியிடம் சரணடைந்தது விட்ட நிலையில், சங்கராச்சாரியாருக்குப் பணிய மறுத்த திருமாவளவன் மீது முஸ்லிம்களுக்கு எப்போதும் நன்மதிப்பு உண்டு

No comments:

Powered by Blogger.